Sunday, July 25, 2010

மானிடப்பிறப்பு


 
பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது போதிசத்வர் மகத நாட்டில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து மகத மன்னனின் மாளிகையில் பணியாளராக இருந்து வந்தார். மகத நாட்டிற்கும் அங்க நாட்டிற்கும் மத்தியில் சம்பா நதி ஓடியது. அந்த நதியின் கீழ் நாகலோகம் இருந்தது.
 
அந்த லோகத்தை சம்பேயன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். மகதநாடும் அங்கதநாடும் எப்போதும் சண்டைப் போட்டுக் கொண்டே இருந்தன. ஒரு முறை இரண்டு நாட்டிற்கும் இடையில் நடந்த போரில் மகத மன்னன் தோற்றுத் தன் குதிரை மீது ஏறி ஓடிப்போனான். அவன் சம்பா நதியை அடைந்ததும் தன் குதிரையோடு ஆற்றில் விழுந்தான்.
 
ஆனால் அவன் நீரில் மூழ்கிச் சாகாமல் தன் குதிரையோடு நாகலோகம் போய்ச் சேர்ந்தான். மகத மன்னனை நாகலோக மன்னனான சம்பேயன் வரவேற்றான். அவனை நன்கு உபசரித்து கே்ஷமநலங்கள் பற்றி விசாரிக்கவே மகத மன்னனும் தன் நிலை பற்றிக் கூறினான்.
 
இதைக் கேட்ட நாக மன்னனும் "கவலைப் படாதீர்கள். நான் உங்களுக்கு உதவி செய்கிறேன். அங்க மன்னனைப் போரில் தோற்கடித்து உங்கள் நாட்டை உங்களுக்கு மீட்டுத் தருகிறேன்" என்றான். அவன் சொன்னபடியே மகத மன்னனுக்கு உதவி புரிந்தான்.
 
போரில் அங்க மன்னன் மடியவே அவனது நாட்டிற்கும் மகத மன்னன் அரசனான். அந்த நிகழ்ச்சிக்கு பின் நாகமன்னன் மகத மன்னனின் ஆருயிர் தோழனாக ஆனான். மகத மன்னன் வருடத்தில் ஒருநாள் தன் பரிவாரங்களோடு சம்பா நதிக் கரைக்குச் செல்வான். 

அன்றே நாகமன்னன் ஆற்றிலிருந்து தன் சுற்றுப் பரிவாரங்களோடு வெளிவந்து மகத மன்னன் அளிக்கும் பரிசுகளை ஏற்றுக் கொள்வான். மகத மன்னனின் பரிவாரத்தில் ஒரு பணியாளாக இருந்த போதிசத்வர் நாக மன்னனின் வைபவத்தைக் கண்ணாரக் கண்டார். அதனால் அவர் இறக்கும் போது அவன் நினைவாகவே இருந்தார். அவர் இறந்த ஏழு நாள்களில் நாக மன்னனும் இறக்கவே போதிசத்வரே அடுத்த நாகமன்னனாகப் பிறந்தார். ஆனால் அவரது உடல் மனித உடலாக இல்லாமல் பாம்பாகவே இருந்தது. இது அவர் மனத்தை உறுத்தியது.
 
அவர் தற்கொலை செய்து கொள்ளலாமா எனத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த போது தான் சுமனா என்ற அழகிய நாகக் கன்னிகை தன் தோழிகளோடு வந்து அவரை வணங்கினாள். அவளைக் கண்டதும் அவர் தனது தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை விட்டு விட்டு அவளை மணந்து கொண்டு நாகலோகத்தை நன்கு ஆண்டு வந்தார்.
 
ஆனால் சிறிது நாள்களுக்குப் பின் அவர் மனம் விரதங்கள், உபவாசங்கள், நிஷ்டை போன்றவற்றில் ஈடுபட்டுப் புண்ணியம் அடைய விரும்பியது. எனவே தன் நாகலோகத்தை விட்டு அவர் பூவுலகிற்குப் போகத் தீர்மானித்துக் கொண்டார். அவர் நாகலோகத்திலிருந்து பூவுலகிற்கு வந்து ஒரு ஒற்றையடிப் பாதை ஓரமாக இருந்த எறும்புப் புற்றைச் சுற்றிப் படுத்துக் கொண்டு "என்னை கருடனோ பாம்பாட்டியோ பிடிக்கக் கூடாதா?" என நினைத்தார்.
 
ஆனால் அவ்விதம் நடப்பதற்கு மாறாக அவ்வழியே வந்தவர்கள் அந்தப் பாம்பை ஒரு தேவதையாகக் கருதி வணங்கி வரலானார்கள். அங்கு அதற்கு ஒரு கோயிலையும் கட்டி வேளாவேளைக்கு அதற்குப் பூஜை செய்ய ஏற்பாடுகளையும் செய்தார்கள். மக்கள் அங்கு வந்து தீராத நோய்கள் தீர வேண்டும் என்றும் தமக்குப் பிள்ளை பிறக்க வேண்டும் என்றும் தாங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தனர்.  

நாகமன்னன் அங்கே இருந்து உபவாசம் இருந்து விட்டு மாதத்தில் ஒருநாள் கிருஷ்ண பட்ச அஷ்டமிநாளன்று நாகலோகம் போய் வரலானான். அவ்வாறு நாகமன்னன் நாகலோகத்திற்கு வந்திருந்த போது அவளது மனைவியான சுமனா ஒரு நாள் தன் கணவரிடம் "நீங்கள் எப்போதும் பூலோகத்திலேயே இருக்கிறீர்களே. உங்களுக்கு ஏதாவது ஆபத்து அங்கு நேர்ந்தால் அதை நான் எவ்வாறு அறிவது?" என்று கேட்டாள்.
 
நாக மன்னனும் அவளை ஒரு குளத்திற்குக் கூட்டிக் கொண்டு போய் "நான் காயப் பட்டால் இதன் நீர் கலங்கி விடும். என்னைக் கருடப் என்னைக் கருடப் பட்சி கவர்ந்து சென்றால் இது உறைந்து கட்டியாகி விடும். என்னை பாம்பாட்டியோ மந்திரவாதியோ பிடித்து விட்டால் இதன் நீர் இரத்தம் போல சிவப்பாக ஆகிவிடும்" என்றான்.
 
சில நாள்களாயின. தட்சசீலத்தில் வசீகர மந்திரங்களைக் கற்ற பிராம்மண வாலிபன் ஒருவன் நாகமன்னனின் கோயில் இருந்த இடத்திற்கு வந்தான். புற்றைச் சுற்றிக் கொண்டு படுத்திருந்த நாக மன்னனைக் கண்டு பாம்பை வசீகரிக்கும் மந்திரத்தை உச்சரித்து அதனைப் பிடித்து தன்னிடமிருந்த ஒரு பெட்டிக்குள் அடைத்து எடுத்துக் கொண்டான்.
 
அவன் பல ஊர்களுக்குப் போய் அந்தப் பாம்பை ஆடவைத்து வேடிக்கைக் காட்டிப் பணம் சம்பாதித்தவாறே காசி நகரை அடைந்தான். அவன் பாம்பிற்கு ஆகாரமே கொடுக்காததால் அது பட்டினி கிடந்தது. இப்படி ஒரு மாத காலம் இருந்தது. அந்த வாலிபன் அவ்வப்போது தவளைகளைப் பிடித்து வந்து அதன் முன் வைத்து வரலானாள். ஆனால் அப்பாம்பு அவற்றைப் பார்க்கக் கூடவில்லை.
 
அந்த வாலிபனோ பல இடங்களில் அந்தப் பாம்பை ஆட வைத்து வித்தைக் காட்டி வந்தான். அந்தப் பாம்பும் நன்றாக ஆடி பார்ப்பவர்களை மகிழ வைத்து வந்தது. இதனால் அந்தப் பாம்பைப் பற்றி எல்லாரும் புகழ்ந்து பேசலானர்.
 
அந்தப் பாம்பின் வித்தையைப் பற்றி காசி மன்னனின் காதிலும் விழுந்தது. அதனால் ஒரு நாள் அந்த வாலிபனை அழைத்து பாம்பை ஆட வைத்து வேடிக்கைக் காட்டச் சொன்னான். இதே சமயம் நாகலோகத்தில் சுமனா தன் கணவன் திரும்பி வராதது கண்டு அவன் காட்டிய குளத்தைப் பார்க்கப் போனாள்.
 அங்கு சென்றதும் அக்குளத்தின் நீர் சிவப்பாக மாறி இருப்பது கண்டு தன் கணவனை யாரோ பிடித்து விட்டார்கள் என அவள் தெரிந்து கொண்டு பூவுலகிற்குப் போய்த் தேடலானாள். அவளுக்கும் காசிநகரில் உள்ள பாம்பு பற்றித் தெரிய வரவே அங்கு அவள் சென்றாள்.
 
அவள் காசி மன்னனின் அரண்மனையை அடைந்தபோது பிராம்மண வாலிபன் தான் பிடித்து வந்த பாம்பை மன்னன் முன் ஆட வைத்து வித்தைக் காட்டிக் கொண்டிருந்தான். அந்தப் பாம்பு தன் மனைவியைக் கண்டதும் மிகவும் வெட்கப் பட்டுப் பாம்புப் பெட்டிக்குள் போய் புகுந்து கொண்டது.
 
சுமனா மானிடப் பெண் போலாகி காசி மன்னனைக் கண்டு அவனிடம் "அரசே என் கணவரை என்னிடம் சேர்ப்பிக்க வேண்டும்" என வேண்டினாள். இதே சமயம் பாம்பும் பெட்டியிலிருந்து வந்து அரசன் முன் ஒரு அழகான வாலிபனாகி நின்றது.
 
காசி மன்னனும் அந்த நாக தம்பதியைக் கண்டு மகிழ்ந்து அவர்களை ஒரு வாரக் காலத்திற்குத் தன் விருந்தினர்களாக இருக்கச் செய்தான். பின்னர் அவன் தன் பரிவாரங்களோடு அவர்களுடன் நாகலோகத்திற்குச் சென்றான்.
 
நாகலோக வைபவங்களைக் கண்டு காசி மன்னன் அடைந்த வியப்பிற்கு அளவே இல்லை. அவன் நாகமன்னனிடம் "இங்கு இவ்வளவு சுக போகங்களும் வைபவங்களும் இருந்தும் தாங்கள் பாம்பாகி புற்றைச் சுற்றிக் கொண்டு படுத்திருந்த காரணம் என்னவோ?" எனக் கேட்டான்.
 
நாகமன்னனும் "இவ்வளவு சுகம் இங்கே இருந்தாலும் பூலோகத்தில் இருந்தால் தான் மறு பிறப்பு அடையாமல் இருப்பதற்கான வழிகாண முடியும். அதற்காகவே நான் அங்கே அவ்வாறு இருந்தேன்" என்றான். அதைக் கேட்ட காசி மன்னன் மிகவும் பரவசப் பட்டான். போதிசத்வரான அந்த நாகமன்னனை வணங்கி அவர் கொடுத்த பரிசுகளை ஏற்றுக் காசிக்குத் திரும்பி வந்தான்.
 

No comments:

Post a Comment