Monday, December 21, 2009

தேவி பாகவதக் கதைகள் -1


நைமிசாரணியத்தில் இருந்த முனிவர்களுக்கு சூதர் வியாசரிடமிருந்து கேட்ட பல புராணங்களைக் கூறினார். ஒரு நாள் சௌனகர் தேவி பாகவதப் புராணத்தைக் கூறும்படி சூதரிடம் வேண்டினார். சூதரும் அதைக் கூறுவதாகக் கூறி ஆதிபராசக்தியைப் பற்றிக் கூறலானார்.

"தேவி ஆதிபராசக்தி மிகவும் சக்தி வாய்ந்தவன். அவளே கல்வி. உலகமே அவளிடம் அடைக்கலம் அடைந்திருக்கிறது. சிருஷ்டியை அசைய வைப்பவள் அந்த ஆதிபரா சக்தியே. மும்மூர்த்திகளும் அவளின் சைகைப்படி நடக்கிறார்கள். பிரம்மா, விஷ்ணுவின் நாபிஸ்தலத்திலிருந்து அதாவது தொப்புளிலிருந்து பிறந்தார். விஷ்ணு வைத்தாங்குபவன் ஆதி சேஷன். நீரின் ஆதாரத்தில் ஆதி சேஷன் இருக்கிறான். அந்த நீருக்கு ஆதாரம் பராசக்தி. இப்படிப்பட்ட ஆதிபராசக்தியின் கதைதான் தேவி பாகவதம்."

அப்போது சௌனகர் சூதரிடம் "ஒரு முறை பிரம்மா என்னிடம் ஒரு சக்கரத்தைக் கொடுத்து "இதன் இருசு எங்கு உடைகிறதோ அது புனிதமான இடமாக இருக்கும். அங்கு கலி புரு ஷன் வர மாட்டான்" என்றார்.
அந்தச் சக்கரத்தின் இருசு இந்த இடத்தில் தான் உடைந்தது. அதனால் இதற்கு நைமிகம் என்ற பெயர் ஏற்பட்டது. நாங்கள் இங்கேயே தங்கி விட்டோம். கிருதயுகம் மீண்டும் வரும் வரை இங்கேயே கலியின் பயமில்லாமல் இருப்போம். இங்கு உள்ளவர்கள் எல்லாம் புண்ணியாத் மாக்கள். எனவே எல்லோருக்கும் தேவிபாகவதத்தைக் கூறுங்கள்" என வேண்டினார்.

சூதரும் மேற்கொண்டு தொடர்ந்தார் இப்போது இருபத்தேழு துவாபர யுகங்கள் கழிந்து இருபத்தெட்டாவது துவாபரயுகம் நடக்கிறது. ஒவ்வொரு துவாரயுகத்திலும் ஒரு வியாசர் பிறந்தார். வேதங்களை அலசி புராணங்களை அளித்த வியாசர் சத்தியவதியின் புதல்வர்.


அவர் தாம் உங்கள் குரு. அவர் தம் மகன் சுகருக்கு தேவி பாகவதத்தைக் கூறுகையில் நான் கேட்டேன்."

அப்போது முனிவர்கள் சூதரிடம் "சுகர் எப்படி வியாசரின் மகனானார்? அவர் அரணிக் கட்டையிலிருந்து பிறந்ததாகச் சிலர் கூறுகிறார்களே. அது சரியில்லையா?" என்று கேட்டார்கள்.

சுகரும் கூறலானார் "ஒரு முறை வியாசர் சரஸ்வதி நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருக்கையில் பறவை கள் தம் குஞ்சுகளுக்கு அன்புடன் உணவு ஊட்டிக் கொண்டிருப்பதைக் கண்டார். அப்போது அவர் மனதில் தனக்கும் ஒரு மகன் இருந்தால் வாஞ்சையுடன் அவனை வளர்க் கலாமே என்று அவர் மனதில் பட்டது. அதற்காகத் தவம் செய்து எந்தக் கடவுளிடம் வரம் கேட்கலாம் என்று அவர் யோசித்துக் கொண்டிருக் கையில் நாரத முனிவர் அவர் முன் வந்தார். அவரிடம் வியாசர் தம் எண்ணத்தைக் கூறி எந்தக் கடவுளை நோக்கித் தவம் செய்வது என்று யோசனை கூறச் சொன்னார்.

அதைக் கேட்ட நாரதர் கூறினார்˜ "என் தந்தைக்கு இப்படிப்பட்ட பிரச் சினை ஏற்பட்டது. அவர் விஷ்ணு விடம் சென்று "நான் உங்களை யாவரிலும் உயர்ந்தவராகக் கருதுகிறேன். ஆனால் உங்களையே விட உயர்ந்தவர் யாராவது இருக்கிறாரா?" என்று
கேட்டார்.

விஷ்ணுவும் "உங்களை சிருஷ்டி கர்த்தா என்றும் என்னை எல்லோரையும் காப்பவர் என்றும் சிவனை அழிப்பவர் என்றும் பொதுவாகக் கருதப்படுகிறது. அது தவறு. ஆதிபராசக்தி தான் யாவற்றையும் படைக்கிறாள். அது போலக் காத்தலையும், அழித்தலையும் அவளே செய்கிறாள். நாமெல்லாம் அவளது கருவிகளாகத் தான் இயங்குகிறோம். நான் மதுகைட பர்களுடன் ஐயாயிரம் ஆண்டுகள் போர் புரிந்து அவர்களை வென்றது அந்த தேவியின் சக்தியால்தானே. நீங்கள் ஏதோ உங்களுக்குள்ள சக்தியால் நீங்களே இயங்குவதாக நினைத்துக் கொண்டு விட வேண்டாம். நானும் அது போல நினைக்க முடியாது. ஏனெனில் ஒரு முறை என் வில்லின் நாண் அறுந்து அது தலையை அடித்துத் துண்டித்து விடவே எனக்கு ஒரு குதிரையின் தலையைப்பொருத்த நீங்கள் தானே ஏற்பாடு செய்தீர்கள்?


அதனால் எனக்கு ஹயக் கிரீவன் என்ற பெயரும் ஏற்பட்ட தல்லவா? எனவே அந்த ஆதிபராசக்தி தான் யாவரிலும் உயர்ந்தவள்" என்றார். நாரதர் இவ்வாறு கூறி "எனவே நீங்கள் ஆதிபராசக்தியைக் குறித்துத் தவம் செய்து உங்கள் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்" என்று வியாசரிடம் கூறினார்.

இவ்வாறு சூதர் கூறி வியாசர் ஆதிபராசக்தியை நோக்கித் தவம் புரிந்தார் எனக் கூறி நிறுத்தவே முனிவர்களும் "ஹயக்ரீவர் என்று கூறினீர்களே அவரது கதையைக் கூறுங்கள்" எனவே சூதரும் சொல்லலானார்.

ஹயக்கிரீவ அவதாரம்

முன்னொரு முறை விஷ்ணு பத்தாயிரம் ஆண்டுகள் அசுரர்களுடன் போரிட்டுக் களைத்துப் போய்த் தன் தலைக்கடியில் தன் வில்லை வைத்துக் கொண்டு படுத்திருந்தார். அப்போது தேவர்கள் அவரைக் காண வந்தார்கள். அவர் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு என்ன செய்வது என்று திகைத்தார்கள்.

பிரம்மாவிடம் சிவனும் "நீங்கள் ஒரு புழுவைச் சிருஷ்டித்து விஷ்ணுவின் வில்லின் நாணில் விட்டு விடுங்கள். அது அந்த நாணைக் கடித்து அறுக்க அப்போது ‘டங்’ என்ற ஒலி கிளம்பும். அதைக் கேட்டு விழித்துக் கொண்டு விடுவார்" என்றார். பிரம்மாவும் புழுவைச் சிருஷ்டித்து விஷ்ணுவின் வில்லின் நாணில் போகச் செய்தார். அந்தப் புழு நாணைக் கடிக்கவே நாண் பெருத்த ஒலியுடன் அறுந்து விடவே வில்லின் முனை விஷ்ணுவின் கழுத் தைத்தாக்கி அவரது தலையைத் துண்டித்து விட்டது.

அதைக் கண்ட தேவர்கள் கண்ணீர் வடித்து "உலகத்தையே காக்கும் உங்களுக்கா இந்தக்கதி! மிக்க பலமுள்ள ராட்சஸர்களால் கூட உங்களை ஒன்றும் செய்ய முடியவில்லையே. இப்போது எந்த சக்தி உங்களை இப்படிச் செய்தது?" என்று கூறி புலம்பினார்கள்.

அப்போது தேவகுரு பிரகஸ்பதி "இப்படி நீங்கள் அழுது கொண்டே இருப்பதில் எந்தப் பயனும் இல்லை. இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள்" என்று கூறினார். அப்போது தேவேந்திரன் "நாமெல்லாம் பார்த்துக் கொண்டி ருக்கும் போது தானே விஷ்ணுவின் தலை துண்டிக்கப்பட்டது. நம்மால் அதைத் தடுக்க முடியவில்லையே.

எனவே ஏதோ ஒரு அபூர்வ சக்தி தான் இவ்வாறு செய்திருக்கிறது" என்றான். பிரம்மாவும் "ஆம். எதற்கும் அந்த ஆதிபராசக்தியின் அனுக்கிரகம் இருக்க வேண்டும். அவளே ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்பவள். எனவே நாம் எல்லோரும் அந்த தேவியைப் பிரார்த்திப்போம்" என்றார்.

தேவர்களும் ஆதிபராசக்தியைப் பிரார்த்திக்கவே அவளும் அவர்கள் முன் தோன்றினாள். அவளிடம் தேவர்கள் "தாயே! விஷ்ணுவுக்கு ஏன் இப்ப டிப்பட்ட நிலை ஏற்பட்டது?" என்று கேட்டார்கள். தேவியும் அது பற்றிக் கூறலானாள்.

"காரணம் இல்லாமல் எதுவும் நடக்காது. ஒரு முறை விஷ்ணு படுக்கையறையில் லக்ஷ்மி தேவியைப் பார்த்து சிரித்தார். அது கண்டு அவள் திகைத்து "இவர் ஏன் சிரித் தார்? என் முகம் விகாரமாகவா இருக்கிறது? என்னை விட அழகானவளை இவர் பார்த்து விட்டாரா?" என எண்ணிக் கோபம் கொண்டாள். அப்போது அவள் விஷ்ணுவின் தலை துண்டாகிக் கடலில் விழ வேண்டுமென சபித்தாள்.

அந்த சாபத்தின் பயனாகத் தான் இப்படி நடந்தது. இதற்கு முன் ஹயக்கிரீவன் என்ற ராட்சஸன் என்னைக் குறித்துத் தவம் செய்தான். ஆயிரவருடம் அவன் தவம் செய்தபின் தான் அவன் முன் நான் தோன்றினேன். அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று நான் கேட்கவே அவன் தனக்கு யாராலும் மரணம் ஏற்படக் கூடாது என்று கோரினான்.

நானோ பூமியில் பிறந்தவன் என்றாவது இறந்து தானாக வேண்டும் என்றிருப்பதால் இதை அளிக்க முடியாது, அதனால் வேறு ஏதாவது வரம் கேள் என்றேன். அப்போது அவன் தான் ஹயக்கிரீவனாதலால் ஹயக்கிரீவன் கையாலே தான் தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரத்தைக் கேட்கவே அதை அளித்தேன்.

இப்போது அவன் உலகத்தையே துன் புறுத்தி வருகிறான். மூவுலகிலும் அவனைக் கொல்லக் கூடியவர் யாருமே இல்லாது போயினர். அதனால் ஒரு குதிரையின் தலையைக் கொண்டு விஷ்ணுவின் உடலில் பொருத்துங்கள். இந்த ஹயக்கிரீவர் ராட்சஸனான ஹயக்கிரீவனைக் கொல்வார்" என்று கூறி மறைந்தாள் ஆதிபராசக்தி.

தேவர்கள் விசுவகர்மாவிடம் ஒரு குதிரைத்தலையைச் செய்து கொண்டு வரும்படி கூறினார்கள். விசுவகர் மாவும் அதனைச் செய்து விஷ்ணுவின் உடலில் பொருத்தினார். இந்த ஹயக்கிரீவர் ராட்சஸ ஹயக்கிரீவனைக் கொன்று உலக மக்களை நிம்மதியாக வாழச்செய்தார்.

மது கைடபர்கள்

ஹயக்கிரீவ அவதாரக்கதையைக் கேட்டபின் முனிவர்கள் சூதரிடம் மது கைடபர்களைப் பற்றிக் கூறும்படி வேண்டவே அவரும் கூறலானார். பாற்கடலில் சேஷநாகத்தின் மீது படுத்து உறங்கிக் கொண்டிருந்த மகா விஷ்ணுவின் இருகாதுகளிலிருந்து மதுவும் கைடபனும் பிறந்து பாற் கடலில் விழுந்து நீந்தியவாறே தாம் எப்படி பிறந்தோம் என்று யோசித்தார்கள்.

அப்போது கைடபன் மது விடம் "நமக்கும் கடலுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது" என்றான். அப்போது ஆகாயத்திலிருந்து யாரோ ஒருவர் கூறிய ஒரு சொல் அவர் கள் காதில் விழவே அதை அவர்கள் ஜெபிக்கலானார்கள். திடீரென ஒரு மின்னல் வெட்டவே அந்த இரு ராட்சஸர்களும் அதைக் கண்டு அது ஆதி பராசக்தி என எண்ணி தேவியைக் குறித்துத் தவம் செய்தார்கள்.

அவர்களது தவம் ஆயிரம் ஆண்டுகள் நடந்து முடியவே தேவியும் அவர்கள் முன் தோன்றினாள். அவர்கள் தமக்குத் தாம் விரும்பும் போது மரணம் ஏற்பட வேண்டுமென்ற வரத்தைப் கோரவே, தேவியும் அதனைக் கொடுத்து விட்டு மறைந்தாள்.

அதன் பின் அவர்கள் கடலில் சஞ்சரித்தவாறே பிரம்மாவைத் தம்முடன் போர் புரிய அழைத்தனர். பிரம்மா பயந்து யோக நிஷ்டையில் அமர்ந் துள்ள விஷ்ணுவைக் கண்டு "இரு ராட்சஸர்கள் என்னைக் கொல்ல வரு கிறார்கள். என்னைக் காப்பாற்ற வேண்டும்" என்று வேண்டினார். விஷ்ணுவோ யோக நிஷ்டையி லிருந்து எழாததால் அவர் ஆதிபரா சக்தியைப் பிரார்த்தித்தார்.

தேவி விஷ்ணுவை நிஷ்டை கலைந்து எழுந்து வரும்படிச் செய்தாள். அது கண்டு பிரம்மா மகிழ்ந்து போனார் (தொடரும்)