Sunday, November 7, 2010

Nov 7

Nov 7

Sunday, August 1, 2010

sdsd

sdsd

Saturday, July 31, 2010

வீட்டிற்குப் போ!




 
பிரம்மதத்தன் காசியை ஆண்ட காலத்தில் அங்கு சேனகர் என்ற மாபெரும் யோகியாக போதிசத்வர் அவதரித்திருந்தார். அதே சமயம் அந்நகரை அடுத்து இருந்த ஒரு கிராமத்தில் பிச்சை எடுத்துப் பிழைக்கும் ஒரு பிராமணன் இருந்தான்.
 
ஒருநாள் அவன் ஏதோ ஒரு ஊரில் பிச்சை வாங்கிக் கொண்டு காட்டு வழியே தன் ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தான். அப்போது ஒரு அசŽர வாக்கு "பிராமணா! நீ இன்று வீட்டிற்குப் போகாமல் இருந்தால் இறந்து விடுவாய். நீ வீட்டிற்குப் போனாலோ உன் மனைவி இறப்பாள்" என்று கூறியது.
 
பிராமணன் சுற்றிலும் பார்த்து யாருமே இல்லாதது கண்டு தன்னை எச்சரித்தவன் யாராவது யட்சனோ கந்தர்வனோ அல்லது பிசாசோ என்று சந்தேகப் பட்டான். அவன் மனத்தில் பயம் ஏற்படவே எப்படியாவது சட்டென வீட்டிற்குப் போய் விட வேண்டும் என்று அவன் துடித்தான். ஆனால் வீட்டிற்குப் போனால் அவன் மனைவி இறந்து விடுவாளாமே. இந்த இக்கட்டான நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் அவன் தவித்தான்.
 
 அவன் நகருக்குள் நுழைந்து ஒரு வீதி வழியாகப் போன போது சேனகரான போதிசத்வர் மக்களுக்கு தர்மோபதேசம் செய்து கொண்டுஇருப்பதைக் கண்டான். அவர் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருக்க மக்கள் அவரைச் சுற்றிலும் கூடி இருந்தார்கள்.
 
இந்தப் பிராமணனும் கூட்ட த்தில் சேர்ந்து கொண்டு போதிசத்வர் கூறியதைக்   கேட்கலானான். போதிசத்வர் தம் பேச்சை முடித்ததும் மக்கள் கூட்டம் கலைந்து சென்றது.
ஆனால் அந்த பிராமணன் மட்டும் ஆடாமல் அசையாமல் மரம் போல நின்றான்.
 
அவனுக்குக் காட்டில் கேட்ட அசŽர வாக்கு மிகுந்த குழப்பத்தைத்தான் உண்டாக்கி இருந்தது. எப்படிப் பார்த்தாலும் கணவன் மனைவி இருவருள் யாராவது ஒருவர் இறந்தாக வேண்டும். இருவரும் இறக்காமல் இருக்க என்ன வழி என்று காணத்தான் அவன் துடித்தான்.
 
அவனைக் கண்ட போதிசத்வர் தன்னருகே வரும்படி அவனுக்குச் சைகை செய்தார். பிராமணனும் அவரருகே போய் அவரை வணங்கி எழுந்து தலை குனிந்து நின்றான். போதிசத்வரும் "நீ எதற்காக இப்போது வேதனைப் படுகிறாய்?" என்று கேட்டார். பிராமணனும் காட்டில் தன்னை யாரோ எச்சரித்ததைக் கூறி "இப்போது நான் என்ன செய்வேன்? வீட்டிற்குப் போனாலே என் மனைவி இறந்து விடுவாளாம். போகா விட்டாலோ நான் இறந்து விடுவேனாம். இருவரும் இறக்காமல் இருக்க ஏதாவது வழி கூறுங்கள்" என வேண்டினான். அப்போது போதிசத்வர் "நீ அந்த எச்சரிக்கையைக் கேட்கும் முன் என்ன செய்து கொண்டிருந்தாய்?" என்று கேட்டார். "நான் ஒரிடத்தில் உட்கார்ந்து பையிலிருந்த உணவை எடுத்துச் சாப்பிட்டேன்" என்றான்.
 
"சரி. உன்னிடம் உணவு உள்ள பை இருக்கிறது. ஆனால் நீர் குடிக்கப் பாத்திரம் எதுவும் இல்லையே. தண்ணீர் எப்படிக் குடித்தாய்?" என்று போதிசத்வர் கேட்டார். "எதிரே ஒரு ஆறு இருந்தது. அங்கு போய்த் தண்ணீர் குடித்து விட்டு வந்தேன்" என்றான் பிராமணன். "அப்படியானால் நீ உணவு சாப்பிட்டு விட்டு பையை அதே இடத்தில் விட்டு விட்டு ஆற்றிற்கு போனாய். அந்த பையில் உணவு மீதமாகி இருந்ததா?" என்று போதிசத்வர் அவனைப் பார்த்துக் கேட்டார்.
 
அவனும் "ஆமாம். பையில் இருந்ததில் பாதியை நான் உண்டேன். மிகுந்ததை கட்டி எடுத்துக் கொண்டு போய் மனைவியிடம் கொடுக்கப் போகிறேன். இதோ அந்தப் பை" என்று காட்டினான். "நீ நதிக்குப் போன போது பையின் வாயைக் கட்டவில்லையே" என போதிசத்வர் கேட்டார். "கட்டவில்லைதான்" எனப் பிராமணன் பதிலளித்தான். 
"அப்படியானால் நதியிலிருந்து திரும்பி வந்துதான் பையின் வாயைக் கட்டினாய். கட்டு முன் அதற்குள் என்ன இருக்கிறது என்று பார்த்தாயா?" என்று அவர் கேட்டார். அவனும் "பார்க்கவில்லை. அப்படியே கட்டி எடுத்து வந்தேன். இதற்குப் பிறகுதான் என்னை எச்சரிக்கும் குரல் என் காதில் விழுந்தது" என்றான்.
 
போதிசத்வரும் "அப்படியானால் நீ ஆற்றில் போய்த் தண்ணீர் குடித்த போது பை இருந்த இடத்தில் ஏதோ நடத்திருக்கிறது. அநேகமாக ஒரு பாம்பு உன் பைக்குள் போயிருக்கிறது என்றே நான் நினைக்கிறேன். அதை கவனித்த யட்சனோ தேவதையோ உன்னை எச்சரித்தது. நீ வீட்டிற்குப் போகாவிட்டால் மறுபடியும் பசிக்கும் போது பையைத் திறப்பாய். அப்போது அதிலிருக்கும் பாம்பு உன்னைத் தீண்டி விடும். நீயும் இறந்து போவாய். நீ பையைத் திறக்காமல் வீட்டிற்குப் போனால் முதலில் பையை உன் மனைவியிடம் தான் கொடுப்பாய். அவளும் அதை ஆவலுடன் திறப்பாள். அப்போது பாம்பு அவளைக் கடிக்க அவள் இறந்து விடுவாள். இது தான் விஷயம்" எனக் கூறி அப்பையைத் தான் உட்கார்ந்திருக்கும் இடத்தருகே வைக்கும்படி அந்த பிராம்மணனிடம் சொன்னார்.
 
பிராம்மணன் அப்போதுதான் தன் பைக்குள் பாம்பு புகுந்திருக்கிறது என அறிந்து திடுக்கிட்டான். போதிசத்வர் கூறியபடியே உடனேயே அவர் பக்கத்தில் வைத்து போதிசத்வர் என்ன செய்கிறார் எனப் பார்க்கலானான்.
 
அப்போது அவ்வழியே சென்ற ஒரு பாம்பாட்டியை அவர் கூப்பிட்டு பையிலுள்ள பாம்பைப் பிடிக்கச் சொன்னார். அவனும் பையின் வாயை அவிழ்த்து சீறி வந்த நல்ல பாம்பைப் பிடித்து கொண்டு போய் விட்டான்.
 
அதன் பிறகு போதிசத்வர் பிராமணனிடம் "நீ இனிமேல் பயமில்லாமல் உன் வீட்டிற்குப் போகலாம்" என்றார். பிராமணன் அவருக்குத் தன் நன்றியறிதலைத் தெரிவித்து, கவலையை விடுத்துத் தன் வீட்டிற்குச் சென்றான்.
 

வழிகாட்டி!



பிரம்மதத்தன் காசியை ஆண்ட காலத்தில் போதிசத்வர் மகத நாட்டு கிராமம் ஒன்றில் மாகதன் என்ற சத்திரியனாகப் பிறந்தார். அந்த கிராமத்தில் ஊரார் கூடிப் பேசப் பொது இடம் இருந்தது. அக்கிராமத்து ஐம்பது குடும்பத் தலைவர்களும் ஒன்று கூடித் தம் பிரச்னைகள் பற்றிப் பேசிக் கொள்வார்கள். நேர் வழியில் செல்லாமல் திருட்டு, கொலை முதலிய குற்றங்களைச் செய்வதோடு தம்மைக் காட்டிக் கொடுக்காமல் இருக்க கிராம அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து வந்தார்கள்.

அக்கூட்டத்தில் சேராமல் தனியாகத் தான் உட்கார மாகதன் இடம் ஒதுக்கிய போதெல்லாம்ம், மற்றவர்கள் அதனை ஆக்கிரமித்துக் கொண்டனர். அதனால் அந்தப் பொது இடத்தில் அல்லாமல் சிறிது தூரம் தள்ளி ஓரிடத்தை சுத்தம் செய்து சிறிய பந்தல் போட்டான். அங்கு நிழல் இருக்கவே எல்லாரும் அங்கு வரலாயினர். மாகதன் சொல்வதைக் கேட்கலாயினர். அவனைத் தம் தலைவனாகவும் ஏற்றனர்.

இவ்விதமாக மாகதன் அவர்களை நல்ல வழியில் திருப்பினான். தம் ஊரைச் சுத்தமாக வைத்து பல வசதிகளை ஊராரின் ஒத்துழைப்புடன் செய்தான். யாவரும் ஒன்று கூடிப் பேச ஒரு பெரிய அரங்கத்தையும் கட்டினான். அங்கு குடிக்க நீரும், படிக்க நூல்களும் வைத்தான். ஐம்பது குடும்பத்தவரும் திருந்தி நல்வாழ்க்கை மேற்கொண்டனர். திருடுவது, கொள்ளையடிப்பது, கொலை புரிவது போன்றவற்றை அறவே விட்டு விட்டார்கள். எப்போதும் மண் வெட்டி, கோடரி, கடப்பாரை, சம்மட்டி ஆகியவற்றை அவர்கள் எடுத்து பாதையில் தடங்கலாக உள்ள மரங்களை வெட்டி நிலத்தைச் சமப்படுத்தி வரலானார்கள்.
 

 மாகதனின் அந்த செய்கைகளால், ஊரார் நல்லவர்களானது கண்டுஅவ்வூரின் கிராம அதிகாரி மனம் புழுங்கினான். முன்பு கொள்ளை கொலைகளைச் செய்து விட்டு அவனுக்கு லஞ்சம் கொடுத்தவர்கள்,இப்போது திருந்தி விட்டதால் தனது வருமானம் நின்று போனதால் கொதித்தான்.

அதனால் அவன் நேராக மன்னனிடம் போய் “அரசே! என் ஊரில் அரசாங்கத்திற்கு எதிராகக் கலகம் விளைவிக்க முயற்சி நடக்கிறது. இக்கலக்காரர்களின் தலைவன் மாகதன் என்பவன் ஆவான்.

அவனது பெரும்பாலான ஆட்கள் எந்நேரமும் கோடரியும் கடப்பாரையும் சம்மட்டியும் எடுத்துக் கொண்டு திரிகிறார்கள். தாங்கள் தாம் இந்தக் கலகக்காரர்களைப் பிடித்து தண்டிக்க வேண்டும்” எனப் பொய்ப் புகார் கொடுத்தான். அரசனும் அவன் கூறியதை நம்பி, உடனே தன் வீரர்களிடம் “இவரோடு கிராமத்திற்குப் போய் அங்கு கோடரி, கடப்பாரை, சம்மட்டி ஆகியவை எடுத்துக் கொண்டு திரிபவர்களைப் பிடித்து இழுத்து வாருங்கள்” என்றான்.

வீரர்களும் அவ்வாறே அக்கிராமத்திற்குப் போய் கோடரி, கடப்பாரை சம்மட்டிகளுடனும் திரிந்த யாவரையும் பிடித்து வந்தனர். அவர்களில் மாகதனும் ஒருவன். அரசன் அவர்களை விசாரிக்காமலேயே தன் காவலர்களிடம் “இந்தத் துரோகிகளை யானையின் கால்களுக்கு அடியே போட்டு மிதிக்கச் செய்யுங்கள்” என்று கட்டளையிட்டான்.


 வீரர்களும் அவர்களை இழுத்துச் சென்று ஓரிடத்தில் நிறுத்தினர். பட்டத்து யானையை அவர்கள் கொண்டு வந்ததும், அந்த யானை மாகதனைப் பார்த்ததும் சட்டென நின்றது. பிறகு பின் வாங்கி பயந்தது போல ஓடி விட்டது. வீரர்கள் வேறொரு யானையைக் கொண்டு வந்தும் அதுவும் அவ்வாறே செய்தது. இம்மாதிரி பல யானைகள் செய்யவே அந்த அதிசயத்தை அவர்கள் மன்னனிடம் போய்க் கூறினார்கள்.

“அவர்கள் யானைகள் தம்மிடம் வராதிருக்க ஏதாவது தாயத்து கட்டிக் கொண்டிருப்பார்கள் போலிருக்கிறது. அவர்களைச் சோதனை போட்டு தாயத்துகளை அகற்றி விட்டு யானைகளை அவர்களின் மீது ஏவுங்கள்” என்று மன்னன் கட்டளையிட்டான்.

ஆனால் வீரர்கள் சோதனை போட்டுப் பார்த்ததில் யாரிடமும் ஒரு தாயத்து கூட இருக்கவில்லை. அதைக் கூறவே மன்னன் “சரி. அவர்களை எல்லாம் என் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள்” என்றான். வீரர்களும் அவர்களை மன்னன் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

மன்னனும் “உங்களுக்கு யானைகளைக் கட்டுப்படுத்தும் மந்திரம் ஏதாவது தெரியுமா?” என்று கேட்டான். அதற்கு மாகதன் “அரசே எங்களுக்கு ஒருவித சக்தி வாய்ந்த மந்திரம் தெரியும். ஆனால் அது நீங்கள் நினைக்கும் சக்தியுள்ள மந்திரம் அல்ல” என்றார்.

“அதென்ன அதிசய மந்திரம்?” என்று மன்னன் கேட்கவே மாகதனும் “எங்களில் ஒருவர் கூட எந்தவொரு உயிருக்கும் தீங்கு இழைக்க மாட்டோம். பொய் பேச மாட்டோம். போதை தரும் பொருள்களைச் சாப்பிட மாட்டோம். ஜீவராசிகளிடம் அன்பு செலுத்துகிறோம். பிறருக்கு உதவுகிறோம். பாதைகளைச் செப்பனிட்டு குளங்கள் வெட்டி சத்திரங்கள் கட்டுகிறோம். இந்த வழிகளைக் கடைப் பிடிக்கும் மந்திரம் தான் எங்களுக்குத் தெரியும்” என்றார்.

இதைக் கேட்ட மன்னன் ஆச்சரியப்பட்டு “இப்படி நல்ல செயல்கள் புரியும் உங்களை அந்த கிராம அதிகாரி ஏன் கலகக்கார துரோகிகள் என்று குற்றம் சாட்டினான்?” என்று கேட்டான். மாகதனும் “நீங்கள் தீர விசாரிக்காமல் அவன் கூறியதை நம்பி விட்டீர்கள்” என்றார்.

“நீங்கள் கோடரியும் கடப்பாரையும் எடுத்துக் கொண்டு திரிந்து மற்றவர்களை பயமுறுத்துவதாக அவன் கூறினான். உங்களிடம் இவை எல்லாம் இருக்கவே நானும் நம்பி விட்டேன்” என்றான் மன்னன்.

மாகதனும் “இவை எல்லாம் நாங்கள் பொதுப்பணி புரிய எடுத்துச் செல்கிறோம். யாரையும் தாக்குவதற்காக அல்ல” என்றார். மன்னன் நன்கு விசாரணை நடத்திய போது மாகதனின் முயற்சியால் அந்த ஊரார் திருந்தியதும், கிராம அதிகாரிக்கு முன்பு கிடைத்து வந்தது போல லஞ்சம் கிடைக்கவில்லை என்பதும் தெரிந்தது.

பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறியதோடு பல ஆண்டுகளாக லஞ்சம் வாங்கி வந்ததற்காகவும் மன்னன் அவனது சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்ததோடு சிறையில் தள்ளினான். அதனை மாகதனிடமே கொடுத்து கிராமத்து நலனுக்காக உபயோகப் படுத்துமாறு கூறி “இனி மேல் நீங்கள் தாம் அந்த கிராமத்துத் தலைவர். நான் இனி எந்த அதிகாரியையும் நியமிக்கப் போவதில்லை” என்றான். அது மட்டுமல்ல தன் பட்டத்து யானையையே அவன் மாகதனுக்குக் கொடுத்து கௌரவித்தான்.
  

Sunday, July 25, 2010

குருவை மதிக்காத சிஷ்யன்!


பிரம்மதத்தன் காசியை ஆண்ட காலத்தில் போதிசத்வர் குத்திலன் என்ற வீணை வித்வானாக இருந்தார். அவர் தம் பதினாறாவது வயதிலேயே தமக்கு இணையாக யாராலும் வீணை வாசிக்க முடியாது என்பதைக் காட்டி விட்டார். அவரது புகழ் எங்கும் பரவி இருந்தது. இதைக் கண்ட காசி மன்னனும் அவரைத் தன் ஆஸ்தான வித்வானாக நியமித்துக் கொண்டான்.

இது நடந்து சில ஆண்டுகளுக்குப் பின் காசியிலிருந்து சில வியாபாரிகள் உஜ்ஜயினி நகருக்குத் தம் தொழில் சம்பந்தமாகச் சென்றனர். அவர்கள் குத்திலனது வீணை வாசிப்பைப் பல முறை கேட்டு ரசித்து மகிழ்ந்தவர்கள். உஜ்ஜயினியில் தம் வேலை சற்றுத் தாமதமாகும் என்பதால் சில நாள்கள் தங்கினர். அப்போது ஒரு நாள் இரவு யாரையாவது வீணை வாசிக்கச் சொல்லிக் கேட்கலாம் என அவர்கள் நினைத்தனர். யாராவது நல்ல வீணை வித்வான் இருக்கிறாரா என அவர்கள் விசாரித்த போது, பலர் மாசிலன் என்ற பெயரைக் கூறினார்கள்.

காசி வியாபாரிகள் தம் பொழுது போக்கிற்காக மாசிலனை வீணைக் கச்சேரி செய்ய அழைத்து வந்தார்கள். ஆனால் மாசிலனது வீணை வாசிப்பு அவர்களில் ஒருவரைக் கூட கவரவில்லை. அவர்கள் ரசிக்கவும் இல்லை. இதைக் கண்ட மாசிலன் “நான் இவ்வளவு நேரமாக வீணை வாசித்தது எப்படி இருந்தது?” என்று கேட்டான். அப்போது காசி வியாபாரிகளில் ஒருவன் “நீங்கள் வீணை வாசித்தீர்களா? நீங்கள் சுருதி கூட்டினீர்கள் என்றல்லவா நினைத்தேன்” என்றான்.

அதைக் கேட்ட மாசிலனின் முகம் அவமானத்தால் சுண்டியது. அவன் அவர்களிடம் “அப்படியானால் என்னை விட நன்கு வாசிக்கக் கூடிய வீணை வித்வான் இருக்கிறார் என்று தானே பொருள்” என்று கேட்டான்.


 அப்போது இன்னொருவன் “அப்படியானால் நீங்கள் எங்கள் காசி வீணை வித்வானை பற்றிக் கேள்வி பட்டதில்லையா?” என்று கேட்டான். “அவர் பெரிய வித்வானா?” என்று மாசிலன் கேட்டான். வேறொருவனோ “அவரது வீணை வாசிப்பைக் கேட்ட பின், நீங்கள் வீணையை வாசிப்பதைக் கேட்டுச் சகித்துக் கொண்டிருக்க முடியுமா?” என்றான். அப்போது மாசிலன் “நான் அவருக்குச் சமமாக வீணை வாசித்துக் காட்டி உங்களிடமிருந்த பணம் வாங்கிக் கொள்கிறேன். இப்போது நீங்கள் எனக்கு பணம் கொடுக்க வேண்டாம்” எனக் கூறி அங்கிருந்து கிளம்பிச் சென்றான்.

மாசிலன் அன்றே உஜ்ஜயினியை விட்டுக் கிளம்பி காசி நகரை அடைந்தான். அங்கு குத்திலனான போதிசத்வரைக் கண்டு “ஐயா! நான் உஜ்ஜயினியை சார்ந்தவன். தங்களிடம் வீணைப் பயிற்சி பெற வந்திருக்கிறேன். தங்கள் தயவு இருந்தால் தங்களைப் போல வீணை வாசிக்கும் பேறு பெறுவேன்” என்றான். போதிசத்வரும் அவனைத் தம் சீடனாக ஏற்று தினமும் வீணையில் அவனுக்குப் பயிற்சி அளிக்காலானார். மாசிலனும் குத்திலனான போதிசத்வரிடம் நன்கு வீணை கற்கலானான்.

இப்படியாக சில ஆண்டுகள் கழிந்தன. ஒரு நாள் போதிசத்வர் தம் சீடனிடம் “நீ என்னிடம் கற்க வேண்டியதெல்லாம் கற்றாகி விட்டது. இனி நீ உன் நாட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்” என்றார். மாசிலனுக்கோ உஜ்ஜயினிக்குத் திரும்பிப் போக இஷ்டமே இல்லை. காசியிலேயே அரச சபையில் உத்தியோகத்தில் அமர்வது என அவன் தீர்மானித்துக் கொண்டான். அவன் போதிசத்வரிடம் “குருவே! நான் உஜ்ஜயினிக்குப் போக விரும்பவில்லை. உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் நானும் கற்றுக் கொண்டு விட்டதால் உங்களோடு எனக்கும் சமஸ்தானத்தில் வித்வானாக இருக்கும் வேலையை வாங்கிக் கொடுங்கள். நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டவனாக இருப்பேன்”என்றான்.

போதிசத்வரும் மறுநாள் காசி மன்னனிடம் மாசிலனுக்கு வேலை போட்டுக் கொடுக்கும்படி கேட்டார். மன்னனும் “மாசிலன் உங்கள் சீடன் என்பதற்காகத்தான் நான் அவனை வேலையில் வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு அவனுக்கு உங்களுக்குக் கிடைக்கும் சம்பளம் அளவிற்குக் கொடுக்க முடியாது. உங்களுக்கு கொடுப்பதில் பாதிதான் கொடுப்பேன். இதற்கு சம்மதமானால் அவன் இந்த வேலையை ஏற்கட்டும்” என்றான்.



 போதிசத்வரும் வீடு திரும்பி மாசிலனிடம் மன்னன் கூறியதைச் சொன்னார். மாசிலன் அது கேட்டு மனம் வருந்தினான். இது என்ன நியாயம்! ஒரே மாதிரியாக உள்ள இருவரில் ஒருவருக்கு நிறையச் சம்பளம்? மற்றவனுக்கு அதில் பாதியா? மன்னனிடமே இதற்கு விளக்கம் கேட்க எண்ணி அவன் மன்னனைச் சந்தித்தான்.

அப்போது, “அரசே, இப்போது ஆஸ்தான வித்வானாக உள்ளவரின் சம்பளத்தில் பாதி கொடுத்து என்னை வேலைக்கு வைத்துக் கொள்ளவதாகக் கூறினீர்களாமே. நான் எந்த விதத்தில் அவரை விடக் குறைந்து போனேன்? அவர் எப்படியெல்லாம் வீணை வாசிக்கிறாரோ அதுபோல என்னாலும் வாசிக்கமுடியும். இது பற்றி என் குருவிடமே நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். எனவே நீங்கள் எனக்கும் அவருக்குக் கொடுக்கும் அளவிற்கு சம்பளம் கொடுங்கள்” என்றான்.

மன்னனுக்கு எரிச்சலாக இருந்தது. அவன் “நீ குத்திலரின் சீடன் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் உனக்கு உத்தியோகம் அளிக்கச் சம்மதித்தேன். நீ அவருக்குச் சமமான வீணை வித்வான் என நான் எப்படி நம்பமுடியும்?” என்று கேட்டான். மாசிலனும் “நீங்கள் எனக்கும் அவருக்கும் போட்டி வைத்துப் பாருங்கள். அப்போது தெரியும்” என்றான். காசி மன்னனும் அதற்கு இணங்கி ஒரு போட்டியை வைத்தான். “நீ இந்தப் போட்டியில் வென்றால் உனக்கு இங்கே உத்தியோகம் கிடைக்கும், தோற்றால் நீ இந்த நாட்டை விட்டே ஓடி விட வேண்டும்” என்றான். மாசிலனும் அதற்கு இணங்கினான்.



மறுநாளே குருவிற்கும் சீடனுக்கும் இடையே போட்டி நடந்தது. அந்த போட்டியைக் காண்பதற்காகவும், கேட்பதற்காகவும் ஏராளமானோர் கூடி விட்டார்கள். இருவரும் ஒருவரை மற்றவர் வெல்வதற்காக வீணையை வாசிக்கலானார்கள். சற்று நேரத்திற்குப் பின் போதிசத்வரின் வீணை கம்பிகளில் ஒன்று அறுந்து போகவே அவர் மூன்று கம்பிகளில் வாசிக்கலானார். அவர் ஏதோ புதிதாய் செய்கிறார் என்றெண்ணிய மாசிலன் தன் வீணையின் ஒரு கம்பியை அறுத்து விட்டு அவரைப் போல வாசித்தான்.

 போதிசத்வரின் வீணையில் மேலும் இரு கம்பிகள் அறுந்து போகவே, ஒரே கம்பியில் வாசித்தார். மாசிலனும் அவரைப் பார்த்து தன் வீணைக் கம்பிகளில் இரண்டை அறுத்து விட்டு ஒரே கம்பியில் வாசித்தான். போதிசத்வரின் வீணையின் கடைசி கம்பியும் அறுந்தது. கம்பி இல்லாமலேயே வீணையிலிருந்து அவர் இனிய நாதம் கிளம்பி வரச் செய்தார்.

மாசிலனும் தன் வீணையின் கடைசிக் கம்பியை அறுத்து விட்டு வாசிக்க முயன்றான். ஆனால் அவனது வீணையிலிருந்து எவ்வித நாதமும் வரவில்லை. சபையோர் போதிசத்வரைப் பாராட்டினார்கள். மாசிலனை கேலி செய்தார்கள். குருவின் திறமை தெரியாமல் அவரை போட்டிக்கு இழுத்த மாசிலனுக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டது. அன்றே தன் ஊரான உஜ்ஜயினிக்குக் கிளம்பி விட்டான்.

மானிடப்பிறப்பு


 
பிரம்மதத்தன் காசியை ஆண்ட போது போதிசத்வர் மகத நாட்டில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து மகத மன்னனின் மாளிகையில் பணியாளராக இருந்து வந்தார். மகத நாட்டிற்கும் அங்க நாட்டிற்கும் மத்தியில் சம்பா நதி ஓடியது. அந்த நதியின் கீழ் நாகலோகம் இருந்தது.
 
அந்த லோகத்தை சம்பேயன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். மகதநாடும் அங்கதநாடும் எப்போதும் சண்டைப் போட்டுக் கொண்டே இருந்தன. ஒரு முறை இரண்டு நாட்டிற்கும் இடையில் நடந்த போரில் மகத மன்னன் தோற்றுத் தன் குதிரை மீது ஏறி ஓடிப்போனான். அவன் சம்பா நதியை அடைந்ததும் தன் குதிரையோடு ஆற்றில் விழுந்தான்.
 
ஆனால் அவன் நீரில் மூழ்கிச் சாகாமல் தன் குதிரையோடு நாகலோகம் போய்ச் சேர்ந்தான். மகத மன்னனை நாகலோக மன்னனான சம்பேயன் வரவேற்றான். அவனை நன்கு உபசரித்து கே்ஷமநலங்கள் பற்றி விசாரிக்கவே மகத மன்னனும் தன் நிலை பற்றிக் கூறினான்.
 
இதைக் கேட்ட நாக மன்னனும் "கவலைப் படாதீர்கள். நான் உங்களுக்கு உதவி செய்கிறேன். அங்க மன்னனைப் போரில் தோற்கடித்து உங்கள் நாட்டை உங்களுக்கு மீட்டுத் தருகிறேன்" என்றான். அவன் சொன்னபடியே மகத மன்னனுக்கு உதவி புரிந்தான்.
 
போரில் அங்க மன்னன் மடியவே அவனது நாட்டிற்கும் மகத மன்னன் அரசனான். அந்த நிகழ்ச்சிக்கு பின் நாகமன்னன் மகத மன்னனின் ஆருயிர் தோழனாக ஆனான். மகத மன்னன் வருடத்தில் ஒருநாள் தன் பரிவாரங்களோடு சம்பா நதிக் கரைக்குச் செல்வான். 

அன்றே நாகமன்னன் ஆற்றிலிருந்து தன் சுற்றுப் பரிவாரங்களோடு வெளிவந்து மகத மன்னன் அளிக்கும் பரிசுகளை ஏற்றுக் கொள்வான். மகத மன்னனின் பரிவாரத்தில் ஒரு பணியாளாக இருந்த போதிசத்வர் நாக மன்னனின் வைபவத்தைக் கண்ணாரக் கண்டார். அதனால் அவர் இறக்கும் போது அவன் நினைவாகவே இருந்தார். அவர் இறந்த ஏழு நாள்களில் நாக மன்னனும் இறக்கவே போதிசத்வரே அடுத்த நாகமன்னனாகப் பிறந்தார். ஆனால் அவரது உடல் மனித உடலாக இல்லாமல் பாம்பாகவே இருந்தது. இது அவர் மனத்தை உறுத்தியது.
 
அவர் தற்கொலை செய்து கொள்ளலாமா எனத் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த போது தான் சுமனா என்ற அழகிய நாகக் கன்னிகை தன் தோழிகளோடு வந்து அவரை வணங்கினாள். அவளைக் கண்டதும் அவர் தனது தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தை விட்டு விட்டு அவளை மணந்து கொண்டு நாகலோகத்தை நன்கு ஆண்டு வந்தார்.
 
ஆனால் சிறிது நாள்களுக்குப் பின் அவர் மனம் விரதங்கள், உபவாசங்கள், நிஷ்டை போன்றவற்றில் ஈடுபட்டுப் புண்ணியம் அடைய விரும்பியது. எனவே தன் நாகலோகத்தை விட்டு அவர் பூவுலகிற்குப் போகத் தீர்மானித்துக் கொண்டார். அவர் நாகலோகத்திலிருந்து பூவுலகிற்கு வந்து ஒரு ஒற்றையடிப் பாதை ஓரமாக இருந்த எறும்புப் புற்றைச் சுற்றிப் படுத்துக் கொண்டு "என்னை கருடனோ பாம்பாட்டியோ பிடிக்கக் கூடாதா?" என நினைத்தார்.
 
ஆனால் அவ்விதம் நடப்பதற்கு மாறாக அவ்வழியே வந்தவர்கள் அந்தப் பாம்பை ஒரு தேவதையாகக் கருதி வணங்கி வரலானார்கள். அங்கு அதற்கு ஒரு கோயிலையும் கட்டி வேளாவேளைக்கு அதற்குப் பூஜை செய்ய ஏற்பாடுகளையும் செய்தார்கள். மக்கள் அங்கு வந்து தீராத நோய்கள் தீர வேண்டும் என்றும் தமக்குப் பிள்ளை பிறக்க வேண்டும் என்றும் தாங்கள் நினைத்த காரியம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்தனர்.  

நாகமன்னன் அங்கே இருந்து உபவாசம் இருந்து விட்டு மாதத்தில் ஒருநாள் கிருஷ்ண பட்ச அஷ்டமிநாளன்று நாகலோகம் போய் வரலானான். அவ்வாறு நாகமன்னன் நாகலோகத்திற்கு வந்திருந்த போது அவளது மனைவியான சுமனா ஒரு நாள் தன் கணவரிடம் "நீங்கள் எப்போதும் பூலோகத்திலேயே இருக்கிறீர்களே. உங்களுக்கு ஏதாவது ஆபத்து அங்கு நேர்ந்தால் அதை நான் எவ்வாறு அறிவது?" என்று கேட்டாள்.
 
நாக மன்னனும் அவளை ஒரு குளத்திற்குக் கூட்டிக் கொண்டு போய் "நான் காயப் பட்டால் இதன் நீர் கலங்கி விடும். என்னைக் கருடப் என்னைக் கருடப் பட்சி கவர்ந்து சென்றால் இது உறைந்து கட்டியாகி விடும். என்னை பாம்பாட்டியோ மந்திரவாதியோ பிடித்து விட்டால் இதன் நீர் இரத்தம் போல சிவப்பாக ஆகிவிடும்" என்றான்.
 
சில நாள்களாயின. தட்சசீலத்தில் வசீகர மந்திரங்களைக் கற்ற பிராம்மண வாலிபன் ஒருவன் நாகமன்னனின் கோயில் இருந்த இடத்திற்கு வந்தான். புற்றைச் சுற்றிக் கொண்டு படுத்திருந்த நாக மன்னனைக் கண்டு பாம்பை வசீகரிக்கும் மந்திரத்தை உச்சரித்து அதனைப் பிடித்து தன்னிடமிருந்த ஒரு பெட்டிக்குள் அடைத்து எடுத்துக் கொண்டான்.
 
அவன் பல ஊர்களுக்குப் போய் அந்தப் பாம்பை ஆடவைத்து வேடிக்கைக் காட்டிப் பணம் சம்பாதித்தவாறே காசி நகரை அடைந்தான். அவன் பாம்பிற்கு ஆகாரமே கொடுக்காததால் அது பட்டினி கிடந்தது. இப்படி ஒரு மாத காலம் இருந்தது. அந்த வாலிபன் அவ்வப்போது தவளைகளைப் பிடித்து வந்து அதன் முன் வைத்து வரலானாள். ஆனால் அப்பாம்பு அவற்றைப் பார்க்கக் கூடவில்லை.
 
அந்த வாலிபனோ பல இடங்களில் அந்தப் பாம்பை ஆட வைத்து வித்தைக் காட்டி வந்தான். அந்தப் பாம்பும் நன்றாக ஆடி பார்ப்பவர்களை மகிழ வைத்து வந்தது. இதனால் அந்தப் பாம்பைப் பற்றி எல்லாரும் புகழ்ந்து பேசலானர்.
 
அந்தப் பாம்பின் வித்தையைப் பற்றி காசி மன்னனின் காதிலும் விழுந்தது. அதனால் ஒரு நாள் அந்த வாலிபனை அழைத்து பாம்பை ஆட வைத்து வேடிக்கைக் காட்டச் சொன்னான். இதே சமயம் நாகலோகத்தில் சுமனா தன் கணவன் திரும்பி வராதது கண்டு அவன் காட்டிய குளத்தைப் பார்க்கப் போனாள்.
 அங்கு சென்றதும் அக்குளத்தின் நீர் சிவப்பாக மாறி இருப்பது கண்டு தன் கணவனை யாரோ பிடித்து விட்டார்கள் என அவள் தெரிந்து கொண்டு பூவுலகிற்குப் போய்த் தேடலானாள். அவளுக்கும் காசிநகரில் உள்ள பாம்பு பற்றித் தெரிய வரவே அங்கு அவள் சென்றாள்.
 
அவள் காசி மன்னனின் அரண்மனையை அடைந்தபோது பிராம்மண வாலிபன் தான் பிடித்து வந்த பாம்பை மன்னன் முன் ஆட வைத்து வித்தைக் காட்டிக் கொண்டிருந்தான். அந்தப் பாம்பு தன் மனைவியைக் கண்டதும் மிகவும் வெட்கப் பட்டுப் பாம்புப் பெட்டிக்குள் போய் புகுந்து கொண்டது.
 
சுமனா மானிடப் பெண் போலாகி காசி மன்னனைக் கண்டு அவனிடம் "அரசே என் கணவரை என்னிடம் சேர்ப்பிக்க வேண்டும்" என வேண்டினாள். இதே சமயம் பாம்பும் பெட்டியிலிருந்து வந்து அரசன் முன் ஒரு அழகான வாலிபனாகி நின்றது.
 
காசி மன்னனும் அந்த நாக தம்பதியைக் கண்டு மகிழ்ந்து அவர்களை ஒரு வாரக் காலத்திற்குத் தன் விருந்தினர்களாக இருக்கச் செய்தான். பின்னர் அவன் தன் பரிவாரங்களோடு அவர்களுடன் நாகலோகத்திற்குச் சென்றான்.
 
நாகலோக வைபவங்களைக் கண்டு காசி மன்னன் அடைந்த வியப்பிற்கு அளவே இல்லை. அவன் நாகமன்னனிடம் "இங்கு இவ்வளவு சுக போகங்களும் வைபவங்களும் இருந்தும் தாங்கள் பாம்பாகி புற்றைச் சுற்றிக் கொண்டு படுத்திருந்த காரணம் என்னவோ?" எனக் கேட்டான்.
 
நாகமன்னனும் "இவ்வளவு சுகம் இங்கே இருந்தாலும் பூலோகத்தில் இருந்தால் தான் மறு பிறப்பு அடையாமல் இருப்பதற்கான வழிகாண முடியும். அதற்காகவே நான் அங்கே அவ்வாறு இருந்தேன்" என்றான். அதைக் கேட்ட காசி மன்னன் மிகவும் பரவசப் பட்டான். போதிசத்வரான அந்த நாகமன்னனை வணங்கி அவர் கொடுத்த பரிசுகளை ஏற்றுக் காசிக்குத் திரும்பி வந்தான்.
 

அநீதி அழியும்


பிரம்மதத்தன் காசியை ஆண்டபோது போதிசத்வர் காசிக்கு அருகே இருந்த ஒரு கிராமத்தில் ஒரு பணக்காரனின் மகனாகப் பிறந்தார். அவர் நன்கு படித்துப் பெரியவரானதும் அவரது பெற்றோர் காசி நகரத்தில்உள்ள ஒருவரது மகளான சுஜாதாவைக் கல்யாணம் செய்து வைத்தார்கள். சுஜாதா மிக மிக அழகானவள். நல்ல புத்திசாலியும் கூட. நற்குணங்கள் படைத்தவள். அவள் தன் கணவன் வீட்டிற்கு வந்து இல்வாழ்க்கை நடத்தி யாவருக்கும் பணிபுரிந்து வந்தாள்.

ஒரு நாள் சுஜாதா தன் கணவரிடம் "நானும் இங்கு வந்து வெகு காலம் ஆகிவிட்டது. ஒருமுறை காசிக்குப் போய் என் தாய் தந்தையரைப் பார்த்து விட்டு வர எண்ணுகிறேன். நீங்களும் என்னோடு வந்தால் நன்றாக இருக்கும்" எனக் கூறினாள்.

போதிசத்வரும் "ஆகா, அப்படியே செய்யலாம். உன் தாய் தந்தையரை நானும் ஒரு முறை பார்த்தது போலவும் இருக்கும்" எனக் கூறித் தன் மனைவியோடு மறுநாள் வண்டி கட்டிக் கொண்டு காசிக்குக் கிளம்பினார். போதிசத்வர் முன் அமர்ந்து வண்டியை ஓட்ட சுஜாதா வண்டிக்குள் உட்கார்ந்து கொண்டு காட்சிகளை ரசித்தவாறே இருந்தாள்.

வண்டியும் காசி நகர எல்லையை வந்தடைந்தது. அங்கே ஒரு குளத்தருகே போதிசத்வர் வண்டியை நிறுத்தினார். சுஜாதாவும் கீழே இறங்கி தான் கட்டி எடுத்து வந்த கட்டு சாத மூட்டையை எடுத்துக் கொண்டு போதிசத்வருடன் குளக்கரைக்குப் போய் அமர்ந்தாள். இருவரும் உணவை உண்டு நீர் பருகிச் சற்று இளைப்பாறி விட்டு பிறகு வண்டியில் அமர்ந்து காசி நகருக்குள் செல்லலாயினர். அப்போது காசி மன்னன் யானை மீது அமர்ந்து பவனி வந்து கொண்டிருந்தான்.

மக்கள் கூட்டமாகக் கூடி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். சுஜாதாவும் தானும் சற்று வேடிக்கை பார்த்து விட்டு வருவதாக தன் கணவரிடம் கூறி அவரது அனுமதி பெற்று கீழே இறங்கி ஒரு ஓரமாக நின்றாள்.  வண்டியிலுள்ள போதே காசி மன்னன் சுஜாதாவைப் பார்த்து அவளது அழகில் மயங்கி விட்டான். அவளை அடைந்து விடுவது என எண்ணிய போது அவள் விவாகமானவள் என்றும் அவளது கணவன் வண்டியிலுள்ள போதிசத்வர் என்பதும் அவனுக்குத் தெரிந்து விட்டது.

போதிசத்வரை எப்படியாவது ஒழித்து விட்டால் அந்த அழகிய பெண் தன்னோடு இருந்து விடுவாள் என அவன் எண்ணி அதற்கு என்ன வழி என்று யோசிக்கலானான். சட்டென ஒரு வழி அவனுக்குப் புலப்பட்டது. அவன் தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு வேலையாளை அழைத்து தன் தலையிலிருந்து கிŽடத்தை எடுத்து அவனிடம் கொடுத்து "நீ இதை அதோ தெரியும் வண்டியில் யாருக்கும் தெரியாமல் வைத்து விட்டு வா" எனக் கூறி போதிசத்வரின் வண்டியைக் காட்டி அனுப்பினான்.

அந்த வேலையாளும் போதிசத்வர் பாராது இருந்த சமயத்தில் அரசனது கிŽடத்தை அவரது வண்டிக்குள் வைத்து விட்டான். இதற்குள் சுஜாதா அரசன் தன்னையே உற்று உற்றுப் பார்ப்பதைக் கண்டு வெட்கப்பட்டு தலையைத் திருப்பிக் கொண்டாள்.



சற்று நேரத்திற்கெல்லாம் அரசாங்க வீரன் ஒருவன் "யாரும் இருந்த இடத்தை விட்டு நகராதீர்கள் நம் அரசரின் கிŽடம் திருடுபோய் விட்டது. எல்லாரையும் சோதனை போடப் போகிறோம்" என அறிவித்தான். வீரர்கள் பலர் சோதனையைப் போட்டனர். ஒரு வீரன் போதிசத்வரின் வண்டியைச் சோதனை போட்டு அதில் முன்பே ஒளித்து வைக்கப்பட்டிருந்த கிŽடத்தை எடுத்து "இதோ திருடன். கிŽடம் அகப்பட்டு விட்டது" எனக் கத்தினான். அரசனும் போதிசத்வர்தான் திருடன் எனக் கூறி அவரது தலையை வெட்டி எறியுமாறு தண்டனை அளித்தான். வீரர்கள் போதிசத்வரைப் பிடித்து சவுக்கால் அடித்து பல தெருக்கள் வழியாக அழைத்துக் கொண்டு கொலைக்களத்திற்குக் கொண்டு போகலாயினர்.


இதைக் கண்ட சுஜாதா அவர் பின்னாலேயே ஓடிக் கண்ணீர் வடித்தவாறே "ஐயோ! நீங்கள் இப்படி அவமானப்பட நான்தான் காரணம். இது எனக்குத் தெரிந்து விட்டது. இந்த அநீதி அடுக்குமா? கடவுளே! என் முறையீட்டைக் கேளாயோ" எனக் கதறினாள். சுஜாதாவின் இந்தப் புலம்பல் தேவலோகத்தையே ஆட்டி உலுக்கியது. தேவேந்திரனும் அதன் காரணத்தைப் புரிந்து கொண்டு தன் சக்தியால் போதிசத்வரை அரசன் இருந்த இடத்தில் அவனது ஆடையிலும் காசி மன்னனை போதிசத்வர் இருந்த இடத்தில் அவரது ஆடைகளைஅணிந்து இருக்கும்படியும் மாற்றம் செய்து விட்டான்.

வீரர்களுக்குத் தாம் பிடித்துச் செல்வது தம் மன்னனைத்தான் என்பது தெரியவில்லை. கொலைக்களத்தில் அரசனின் தலை துண்டிக்கப்பட்ட போதுதான் உண்மை தெரிந்தது. மன்னனின் ஆடைகள் திரும்ப அவனது உடலுக்கு வந்தன. போதிசத்வரின் ஆடைகள் அவரிடமே போய் விட்டன. தம் கொடுங்கோல் மன்னன் ஒழிந்தான் என்பது கண்டு காசி மக்கள் மகிழ்ந்து போய் ஆரவாரம் செய்தனர். இதற்குக் காரணமான போதிசத்வரைக் காண எல்லாரும் கூடி விட்டனர்.

அப்போது தேவேந்திரன் அவர்கள் முன் தோன்றி நடந்ததை எல்லாம் கூறி காசி மன்னன் தன் கெட்ட எண்ணத்தாலேயே அழிந்தான் என்றும் இனி காசியை போதிசத்வரே ஆண்டு வருவார் என்றும் சுஜாதா அவரது பட்டத்து ராணியாக இருப்பாள் எனவும் கூறி எல்லாரையும் ஆசீர்வதித்து விட்டு மறைந்தான். மக்களும் போதிசத்வரைத் தம் மன்னராக ஏற்று அவரது ஆட்சியில் சுக வாழ்வு வாழ்ந்தனர். போதிசத்வரும் சுஜாதாவுடன் சிம்மாசனத்தில் அமர்ந்து நேடுங்காலம் ஆட்சி புரிந்து மக்களை சுகமாக இருக்கச் செய்தார்.