Friday, October 9, 2009

கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்!

>

அது ஒரு சிற்றூர். அதை ஒட்டி ஒரு காடு. அந்த சிற்றூரில் முத்து என்பவன் வசித்து வந்தான். அவன் ஒரு நாள் காட்டுக்கு விறகு வெட்டச் செல்லும்போது, அழகான மான்குட்டியைக் கண்டு, அதை தூக்கிக் கொண்டுவந்து வளர்த்தான். அதற்கு வேண்டியதெல்லாம் செய்துகொடுத்து பராமரித்தான்.

ஒருநாள் திடீரென அந்த மான் காணாமல் போனது. பிரியமாக வளர்த்து வந்த மானைக் காணாமல் அங்குமிங்கும் தேடி அலைந்தான். எங்கு தேடியும் கிடைக்காததால், கடும் கோபம் கொண்டான். "மானைக் கடத்தியவன் யாராக இருந்தாலும் அவனை சும்மா விட மாட்டேன்" என சபதம் போட்டான். கடத்தியவனைக் கண்ணில் காட்டும் படி கடவுளிடம் உருகி வேண்டினான்.

அடுத்த நிமிடமே கடவுள் அவனுக்கு காட்சியளித்தார். "பக்தா.. உன் மான் காணாமல் போனதற்கு வருந்துகிறேன். உனக்கு என்ன வேண்டும்?" என்றார்.

"எனது மான் காணாமல் போக யார் காரணமோ, அவர்களை என் கண் முன்னால் காட்டுங்கள். அவனுக்கு என் கையால் தண்டனை அளிக்க வேண்டும்" என ஆவேசமாகக் கூறினான்.

"பாசத்தை விட கோபம் அதிகமாக இருக்கக் கூடாது பக்தா. உன் மானைக் கேள், அல்லது பொன் பொருள் என எது வேண்டுமானாலும் கேள், தருகிறேன். உன் கோபத்தால் சிக்கலில் மாட்டுவாய்" என்றார்.

ஆனால் அவன் கேட்பதாக இல்லை. "என்ன ஆனாலும் சரி, அவனை என் கண்முன்னே நிறுத்துங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவது உங்கள் கடமையல்லவா.." என கத்தினான்.

சிறிது நேரத் தயக்கத்துக்குப் பின், "சரி, இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நீ தான் பொறுப்பு" எனக் கூறினார்.

உற்சாகமான அவன் "இது போதும்.. அவனைக் கொண்டுவாருங்கள்" என்றான்.

உடனே கடவுள் கையை நீட்ட, அங்கு நின்றிருந்தது மிகப் பெரிய சிங்கம்!

அதைப் பார்த்த்து உறைந்து போன முத்து, கடவுளே காப்பாற்று என அலறிக் கொண்டே அங்குமிங்கும் ஓடினான். ஆனால் சிங்கத்திடமிருந்து தப்பிக்க முடியுமா என்ன!

இன்றைய மனிதர்கள் பலரும் இப்படித்தான். ஆத்திரத்தால் அறிவிழக்கிறார்கள். பழிவாங்கும் எண்ணம் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தி விடும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஆத்திரம் வரும் நேரத்தில் ஒரு நிமிடம் அறிவுக்கு வேலை கொடுத்தால் போதும். எந்தப் பிரச்சனையும் நெருங்காது.


1 comment:

  1. For ambulimama or other any tamil comics magazine once contact me whatsapp 7870475981

    ReplyDelete